கோவை, நெல்லை மாநகராட்சி மேயர்கள் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 96 இடங்களில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றிருந்தது. கோவை மாநகராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 19வது வார்டு மாமன்ற உறுப்பினரான கல்பனா ஆனந்தகுமார் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், அவர் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் தொடர்ந்து மோதல் போக்குடன் நடந்து கொண்டதாக புகார்கள் எழுந்தது. இதனால், மேயரை கண்டித்து திமுக கவுன்சிலர்களே மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த நிகழ்வும் நடந்தன. மேலும், டெண்டர், கமிஷன் விவகாரங்கள் தொடர்பாகவும் திமுக கவுன்சிலர்களே பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தின்றனர்.
அதேபோல, நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 51 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். நெல்லை மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் உள்ளார். மாமன்ற உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் மேயர் சரவணனுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக மாமன்ற உறுப்பினர்கள் 38 பேர் மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆணையரிடம் மனு அளித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் தங்கம் தென்னரசு சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இந்த மோதல் போக்கை அப்போதைக்கு முடித்து வைத்தார் . எனினும் அதிருப்திகள் அடங்கியபாடில்லை.
தொடர்ச்சியாக, கோவை மற்றும் நெல்லை மாநகராட்சியில் மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு இடையே தொடர்ந்து பூசல் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து, மக்களவைத் தேர்தல் பரபரப்புகள் நீங்கிய பிறகு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இது குறித்து விசாரணை நடத்தினார்.
கோவை மாநகராட்சி, நெல்லை மாநகராட்சி நிலவரம் தொடர்பாக நேரடியாக விசாரித்து அமைச்சர் கே.என்.நேரு கொடுத்த ரிப்போர்ட்டை தொடர்ந்து கட்சி் தலைமை, கோவை மேயர் கல்பனாவையும், நெல்லை மேயர் சரவணனனியும் ராஜினாமா செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், பதவியை தக்க வைக்க இருவருமே சென்னை சென்று தலைமை நிர்வாகிகளிடம் பேசியுள்ளனர்.
இருப்பினும், இருவரையும் மாற்றுவதில் தலைமை உறுதியாக இருந்துள்ளது. ஊரக உள்ளாட்சி பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அதற்குள் இந்த பிரச்சனைகளை தீர்த்து நிலைமையை சுமூகமாக்க வேண்டும் என தலைமை முடிவெடுத்துள்ளது. அதைத் தொடர்ந்தே இருவரும் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கோவை மேயர் கல்பனா, கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் தனது உதவியாளர் மூலமாக தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். அந்த ராஜினாமாவை கோவை மாநகர ஆணையரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதேபோல, நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சவரணன் தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவுக்கு அனுப்பி உள்ளார். தனது சொந்த காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2 மேயர்களும் ஒரே நாளில் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளது திமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது. இது கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தி வரும் மற்ற நிர்வாகிகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொடுக்கும் மெசேஜ் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.