திமுக மாணவரணி சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு தமிழக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போது நாய் கூட பிஏ பட்டம் வாங்குகிறது டாக்டர் பட்டம் திராவிட இயக்கம் போட்ட பிச்சை என அவர் பேசியதற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்பதோடு, நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்துவ ஆணையச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற சட்டசபை நிகழ்வின் போது தனி தீர்மானத்தை கொண்டு வந்தார்.
தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக வலியுறுத்தவதாக அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், இந்திய நாடாளுமன்றத்திலும் நீட் தேர்வு விவகாரம் எதிரொலித்தது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் மஹுவா மொய்த்ரா மற்றும் தமிழக எம்பிக்கள் பலரும் குரல் கொடுத்தனர்.
இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக மாணவர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர்கள், மாணவரணி நிர்வாகிகள், கல்வியாளர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி," கம்யூனில் ஜி.ஓ. மூலம் தான் இங்கு நம்மில் பல பேர் டாக்டர்கள். பல பேர் இதை மறந்து விட்டார்கள். ஏதோ குலப்பெருமையால், கோத்திர பெருமையால் டாக்டர் ஆகிவிட்டது போல பேசுகிறார்கள். நான் வெளிப்படையாகவே பேசுகிறேன். நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதே கிடையாது. மனசுக்கு பட்டதை அப்படியே வெளிப்படையாக பேசக்கூடிய தைரியம் உள்ளவன் நான்
நான் ஒரு வக்கீல் என்றால் இது என்ன குல பெருமையால் கோத்திர பெருமையால் வந்ததா? நான் படிக்கும்போது பிஏ படித்தாலே வீட்டில் போர்டு வைத்துக் கொள்வார்கள். இப்போது நாய்கூட பிஏ பட்டம் வாங்குகிறது. எங்கள் பட்டப் படிப்புகள் குலம் கோத்திர பெருமையால் வரவில்லை. எங்கள் பட்டப் படிப்புகள் டாக்டர் பட்டங்கள் எல்லாம் திராவிட இயக்கம் போட்ட பிச்சை. குலம் கோத்திர பெருமையால் டாக்டராகவில்லை. சாதிவாரி இட ஒதுக்கிட்டதால் தான் எங்களில் பலர் மருத்துவர்கள் ஆகினர். எல்லோரும் பட்டம் பெறுவதை தடுப்பதற்கு தான் நீட் போன்ற நுழைவு தேர்வுகள் வந்துள்ளது."என பேசினர்.
அவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டங்கள் எழுந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதிகூட இல்லை. ஆனால், தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு, வரதராஜனை உட்கார வைத்தார். அதன் பின்னர் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த ஏழெட்டு பேர் நீதிபதிகளாக இருந்தார்கள் என்றால் அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.