கொரோனா தளர்வுகளுக்கு பிறகு கிராம சபை கூட்டம் நடத்தாதது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கேட்ட போது அதனை மாவட்ட ஆட்சியரிடம் கேளுங்கள் என கடுப்பாகி சென்றுவிட்ட சம்பவம் மதுரை அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியிருக்கிறது.
மதுரை கோவில் பாப்பா குடி பகுதியில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மழை நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகளை 161.39 லட்சம் மதிப்பீட்டில் அமைச்சர் செல்லூர் ராஜு பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார் .
இந்த விழாவில் பேசிய கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, நரேகா திட்டத்தின் கீழ் ஒரே ஊராட்சிக்கு இவ்வளவு பெரிய தொகை இதுவரை ஒதுக்கப்பட்டது இல்லை . அதுவும் ஒரே வாரத்தில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது எனவும்
அந்த பெருமை அனைத்தும் அமைச்சரை தான் சாரும். என பேசினார். ஆனால் நரேகா எனப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் திட்டப்பணிகள் நடைபெற கிராம சபை கூட்டத்தின் ஒப்புதல் பெற வேண்டும் . ஆனால் கடந்த நான்கு முறை கிராம சபை கூட்டமே நடைபெறவில்லை.
கொரோனா தளர்வுகளுக்கு பிறகு கிராம சபை கூட்டம் நடத்தாதது குறித்து அமைச்சரிடம் கேட்ட போது அதனை மாவட்ட ஆட்சியரிடம் கேளுங்கள் என கூறி விட்டார்.
ஏற்கனவே மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மதுரைக்கு கிடைத்த 110 கோடியில் 97 கோடி ஒரே தொகுதிக்கு சென்று விட்டதாக மதுரை மக்களவை உறுப்பினர் குற்றம் சாட்டி வரும் சூழ்நிலையில்,
நரேகா திட்டத்தில் ஒரே ஊராட்சிக்கு 1 கோடியே 61 லட்சம் பெற்று பணிகளை தொடக்கிய அமைச்சர் செல்லூர் ராஜூ , மற்ற தொகுதிகள் புறக் கணித்து, பாரபட்சமாக செயல்படுகிறாரா என்றும்,
அமைச்சர்களின் தொகுதிகளுக்கு பணிகள் செய்வதற்காக மற்ற தொகுதிகள் புறக்கணிக்க படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது .