தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கொண்டாட்டத்தில் சிறுவனின் கையில் தீ பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் முதன்மை நடிகர்களில் ஒருவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் 50 வது பிறந்தநாளை அவரது கட்சியினரும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள நீலாங்கரை பகுதியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியான ஈசிஆர் சரவணன் என்பவர் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அப்போது, சிறுவன் ஒருவன் கைகளால் ஓடுகளை உடைக்கும் சாகசம் செய்தார். இதற்காக அவரது கையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைக்கப்பட்டது. தீ பற்றியதும் சிறுவனும் கல்லை உடைத்து சாகசம் செய்தான். ஆனால் எதிர்பாராத விதமாக சிறுவனின் கை முழுவதும் திடீரென தீ பற்றியது.
இதனால் கதறி துடித்ததை பார்த்த அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். அப்போது அங்கிருந்தவர் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டில் இருந்த மண்ணெண்ணெய்யும் அந்த சிறுவனின் கையில் கொட்டியது. இதனால் தீ மேலும் பரவியது. நிகழ்ச்சி நடைபெற்ற மேடையிலும் தீ பற்றியது.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையடுத்து கட்சி நிர்வாகிகள் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவரான நடிகர் விஜய் உத்தரவிட்டிருந்தார். ஆனால் கட்சி நிர்வாகிகள், அவர் சொன்னதை கேட்காமல் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.