• vilasalnews@gmail.com

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளரை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!

  • Share on

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இதனால் விக்கிவராண்டி தொகுதி காலியான நிலையில், மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் 14ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 24ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறவுள்ளது. 26 ம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிடும். ஜூலை 10ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் ஜூலை 13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மக்களவைத் தேர்தல் முடிந்த கையோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சியினர் தொடங்கிவிட்டனர். குறிப்பாக ஆளும் கட்சியான திமுக விக்கிரவாண்டியில் வெற்றிபெற தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தனது மகன் கவுதம சிகாமணியை களமிறக்க பொன்முடி முயற்சித்து வருவதாக கூறப்பட்டது. அதேபோல விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா, விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் மறைந்த எம்எல்ஏ புகழேந்தியின் மருமகள் பிரசன்னா தேவி ஆகியோரும் வேட்பாளர் போட்டியில் தீவிரம் காட்டினர்.

இந்த சூழலில் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் திமுக சார்பில் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுவார்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் கைகாட்டும் நபரே வேட்பாளராக அறிவிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு இத்தொகுதியில் செல்வாக்கு உள்ளதால், அக்கட்சியும் போட்டியிட விரும்புகிறது. இது தொடர்பாக பாமக நாளை ஆலோசனை நடத்துகிறது. நாம் தமிழர் கட்சி வழக்கம்போல தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனால் மக்களவைத் தேர்தல் போலவே இடைத்தேர்தலிலும் நான்கு முனை போட்டி என்பது உறுதியாகியுள்ளது.

  • Share on

மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை? பதவி ஏற்க வரும்படி அழைப்பு!

10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை : 28 வயது இளம்பெண் போக்சோவில் கைது!

  • Share on