தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அமைச்சராக பதவியேற்க வரும்படி அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பின் மூன்றாவது முறையாக தொடர்ந்து நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவி ஏற்க உள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இன்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர், பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் சுமார் 8000 விருந்தினர்கள் பங்கேற்கின்றனர்.
இதனை முன்னிட்டு தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் இரவு 7 மணிக்கு மேல் பதவி ஏற்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஜன சேனா, லோக் ஜனசக்தி, மதச்சார்பற்ற ஜனதா தளம், சிவ சேனா உள்ளிட்ட கட்சிகளுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவரான அண்ணமலைக்கும் மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் கோவைத் தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 2 வது இடத்தை பிடித்து தோல்வியை சந்தித்தார்.
தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும், தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது.