• vilasalnews@gmail.com

தமிழகத்தில் வெல்லப்போவது யார்? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முழு விபரம்!

  • Share on

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தோ்தல் வாக்குபதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதில், முதல் கட்டமாக தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்., 19- இல் தோ்தல் தொடங்கி இன்றுடன் நாட்டின் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. ஏழாவது கட்டமாக 57 தொகுதிகளுக்கு இன்று இறுதிக்கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று மாலை 6 மணியுடன் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்த வாக்குப் பதிவு நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளது.

வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை, இன்று ( சனிக்கிழமை ) மாலை 6 மணிக்குப் பிறகு வெளியிடலாம் என தோ்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், செய்தி ஊடகங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

அதில், தமிழகத்தில் எந்த கூட்டணி எத்தனை இடங்களை கைப்பற்றப்போகிறது என்பது குறித்து வெளியான கருத்துக் கணிப்புகளின் தொகுப்பு பார்ப்போம்.

ஆக்ஸிஸ் மை இந்தியா

ஆக்ஸிஸ் மை இந்தியா நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், தமிழகத்தில் திமுக - இந்தியா கூட்டணிக் கட்சிகள் 33 - 37 தொகுதிகளில் வெல்லும் என்றும், பாஜக - தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 - 4 தொகுதிகளில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏபிபி - சி ஓட்டர்

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு 46.3 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு 18.9 சதவீத வாக்குகளும் கிடைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக 21 சதவீத வாக்குகளை பெறும் என்றும், இதர கட்சிகள் 13.8 சதவீத வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் 18

தமிழகத்தில் இந்தியா கூட்டணி ஒட்டுமொத்தமாக உள்ள 39 தொகுதிகளில் 36 முதல் 39 தொகுதிகளையும் கூட கைப்பற்றலாம் என்றும், பாஜக தலைமையிலான கூட்டணி ஒரு தொகுதியில் வெற்றி பெற்று தமிழகத்தில் தனது வெற்றி கணக்கைத் தொடங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியா டிவி - சிஎன்எக்ஸ்

திமுக இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணியின் கை ஓங்கும் என்றாலும், பாஜக கூட்டணி ஐந்து முதல் ஏழு இடங்களில் வெற்றி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே

இந்தியா டுடே வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், தமிழகத்தில் இந்தியா கூட்டணி 33 - 37 தொகுதிகளில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 - 4 தொகுதிகளிலும் அதிமுக 0 - 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்டிடிவி - ஜன்கி பாத்

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 0 - 5 தொகுதிகளையும் திமுக - இந்தியா கூட்டணி 34 - 38 தொகுதிகளயும் அதிமுக 0 - 1 தொகுதியையும் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

டிவி9 பாரதவர்ஷ் - போல்ஸ்டார்

வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பில், இந்தியா கூட்டணி 35 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 4 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

அதிமுகவை விட பெரிய கட்சியாகும் பாஜக! எக்சிட் போல் முடிவில் வந்த கணிப்பு!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை : சதுரகிரி மலை கோவில் செல்ல தடை!

  • Share on