தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 36-39 சீட்களிலும், பாஜக கூட்டணி 1-3 இடங்களில் வெல்லும் என்று சிஎன்என் நியூஸ் 18 தெரிவித்துள்ளது.
நாடு முழுக்க 543 தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் 272 தொகுதிகளில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணிக்கே பெரும்பான்மை கிடைக்கும். தேசியளவில் பார்க்கும் போது பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவி வருகிறது.
தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதற்கு முன்னதாக இன்று மாலை பல்வேறு நிறுவனங்களும் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை இப்போது வெளியிட்டு வருகிறது.
அதன்படி சிஎன்என் நியூஸ் 18 தமிழ்நாட்டில் எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்த சர்வேயை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா கூட்டணி 36-39 சீட்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி 1-3 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணி 0-2 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.