தமிழ்நாட்டின் கன்னியாகுமரி ஸ்ரீபாத பாறையில் 142 ஆண்டுகளுக்கு முன்னர் நரேந்திரநாத் தத்தா என்ற இயற்பெயரைக் கொண்ட சுவாமி விவேகானந்தர் தியானமிருந்தார். தற்போது நரேந்திர தாமோதரதாஸ் மோதி என்ற பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் தவமிருக்கப் போகிறார்.
கன்னியாகுமரி கடற்பரப்பில் சிறியதும் பெரியதுமான பாறைகள் உள்ளன. இதில் ஒன்று ஸ்ரீபாத பாறை. ஆன்மீக அடிப்படையில் சிவபெருமானை மணப்பதற்காக ஸ்ரீபகவதி அம்மன் இப்பாறையில் தவமிருந்தார் என்பது புராணக் கதை. இப்பாறையில் பகவதி அம்மன் பாதத் தடம் இருக்கிறது என்பது ஆன்மீக நம்பிக்கை. இதனால் இதற்கு ஸ்ரீபாத பாறை என பெயரிட்டு அழைத்து வந்தனர்.
1882-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான நரேந்திரநாத் தத்தா என்ற சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். அப்போது ஸ்ரீபாத பாறையில் விவேகானந்தர் தவமிருக்க விரும்பினார். இதற்காக கன்னியாகுமரி மீனவர்களிடம் உதவி கேட்டார். ஆனால் பணம் கொடுத்தால் படகில் ஸ்ரீபாத பாறைக்கு அழைத்துச் செல்வோம் என மீனவர்கள் கூறியதாக செவி வழிச் செய்தி உலாவுகிறது. இதனால் வேறுவழியே இல்லாமல் கடலில் நீந்தியபடியே ஸ்ரீபாத பாறைக்கு சென்று 3 நாட்கள் விவேகானந்தர் தவமிருந்து திரும்பினார் என்பது ஒரு தகவல்.
இதனடிப்படையில் இந்த ஸ்ரீபாத பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1972-ம் ஆண்டு விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. மேலும் விவேகானந்தரின் படங்கள், புத்தகங்கள் ஆகியவையும் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுதான் தற்போது விவேகானந்தர் பாறை என்று அழைக்கப்பட்டு வருகிறது.
விவேகானந்தர் மண்டபம் அருகே மற்றொரு பிரம்மாண்ட பாறை உள்ளது. இதன் மீதுதான் தமிழரின் பெருமிதத்தை உலகுக்கு சொல்லும் வகையில் 133 அடி வானுயர் திருவள்ளுவர் சிலையை மறைந்த முன்னாள் தலைவர் கருணாநிதி அமைத்தார். விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைகளுக்கு அரசு சார்பில் படகுப் போக்குவரத்து இயக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டும் வருகின்றனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த விவேகானந்தர் தவமிருந்த பாறையில்தான் நரேந்திர தாமோதரதாஸ் மோதி என்ற பிரதமர் நரேந்திர மோடியும் நாளை முதல் 3 நாட்கள் தவமிருக்கிறார்- தியானம் மேற்கொள்கிறார். 142 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்னொரு 'நரேந்திரா' ஸ்ரீபாத பாறையில் தவமிருக்கப் போகிறார்.