ரேஷன் கடையில் மே மாத பொருட்களை ஜூன் மாதம் முதல் வாரம் வரை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த மே மாதம் துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்படவில்லை என புகார்கள் எழுந்தன. இந்த இரு பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களான துவரம் பருப்பும் பாமாயிலும் கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில்தான் இது குறித்து தமிழக அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் சிறப்பு பொது விநியோக திட்ட பொருட்களான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் கடந்த 14.04.2007 முதல் ஒவ்வொரு மாதமும் திறந்தவெளி ஒப்பந்தபுள்ளி மூலம் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் மே மாதத்துக்கு தேவையான 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு/ கனடா மஞ்சள் பருப்பு மற்றும் 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளுக்குரிய இ-ஒப்பந்தப்புள்ளி இந்திய தேர்தல் ஆணைய 18.04.2024ம் தேதி ஒப்புதலின்படி 20.4.2024 அன்று கோரப்பட்டு 20.05.2024 அன்று ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 4.05.2024 அன்று விலைப்புள்ளி திறக்கப்பட்டது. இதில் குறைந்த விலைப்புள்ளி அளித்திருந்த பருப்பு மற்றும் பாமாயில் ஒப்பந்தாரர்களுடன் விலைக்குறிப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
விலைக்குறைப்பு பேச்சுவார்த்தையில் நியாயமான விலை கிடைக்க பெற்றதால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குழுமத்தின் ஒப்புதலின்படி துவரம்பருப்பு விநியோகிப்பாளர்கள் நால்வருக்கும், பாமாயில் விநியோகிப்பாளர்கள் மூவருக்கும் கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டு நாளது தேதி வரை நடப்பு மே மாதத்துக்குரிய விநியோகிப்பதற்காக நியாய விலைக்கு கடைகளுக்கு 5,405 மெட்ரிக் டன் துவரம் பருப்பு மற்றும் 31,19,722 பாமாயில் பாக்கெட்டுகள் நகர்வு செய்யப்பட்டுள்ளன. ஆகவே அனைத்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயிலை தமிழக அரசு தேவையான அளவுக்கு கொள்முதல் செய்து கிடங்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால் இந்த மாதத்திற்கான துவரம் பருப்பையும் பாமாயிலையும் வரும் ஜூன் மாதம் முதல் வாரம் வரை ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு எப்போது சென்றாலும் மூடியே கிடப்பதாக ஒரு புகார் எழுந்தது. இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. அது போல் தமிழக அரசு, ரேஷன் கடைக்காரர்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே போல் மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு உரிய முறையில் பொருட்கள் வழங்க வேண்டும் என்றும் இதை கடைப்பிடிக்காவிட்டால் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.