முன்எப்போதும் இல்லாத வகையில் கடந்த இரு தினங்களாக திடீரென போலீசார் அரசு பேருந்து டிரைவர்களுக்கு அபராதம் விதித்து வரும் செயல் பேசுபொருளாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் நாங்குநேரி என்ற இடத்தில் ஏறிய ஆறுமுகப்பாண்டி என்ற காவலரிடம் பயணச்சீட்டு எடுக்கும்படி நடத்துனர் கேட்ட போது, காவலர் பணியில் இருப்பவர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று கூறி பயணச்சீட்டு எடுக்க காவலர் மறுத்துள்ளார். இதனால், அந்த காவலருக்கும் அப்பேருந்தில் நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியது.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் இந்த விவகாரம் தொடர்பாக ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அதில், “தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் கட்டணமின்றி தமிழ்நாடு அரசுப் பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை. வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமின்றிப் பயணிக்க முடியும், மற்ற நேரங்களில் காவலர்கள் பயணச்சீட்டு எடுக்க வேண்டும். தூத்துக்குடி சென்ற பேருந்தில் ஏறி பயணச் சீட்டு எடுக்க மறுத்த காவலர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,” எனக் கூறப்பட்டிருந்தது.
இவ்விவகாரம் தொடர்பாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு, இவை பேரும் விவாத பொருளானது. இந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்
"கடந்த 2021 - 2022 ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், பணி செய்யும் மாவட்டத்துக்குள் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே அறிவித்துள்ள நிலையில், காவலர் திரு. ஆறுமுகப்பாண்டி அவர்களை, இது போன்று துன்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்? முதலமைச்சரின் இந்த மானியக் கோரிக்கை அறிவிப்பு, மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. எனப் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து, இவ்விவகாரத்தில் கருத்து பேசிவந்தவர்கள் எல்லாம் முதலமைச்சரின் அந்த மானியக் கோரிக்கை அறிவிப்பு என்ற என்று நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்.
அதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு காவல்துறைக்கான மானியக் கோரிக்கையை சட்டமன்றத்தில் அறிவித்தார். அதில் காவல்துறைக்கு என மொத்தமாக 44 அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், “காவலர் முதல் ஆய்வாளர் வரை தங்கள் அடையாள அட்டையைக் காண்பித்து பேருந்தில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் பயணம் செய்யலாம். இதற்காக ‘நவீன அடையாள அட்டை’ (Smart Identity Card) வழங்கப்படும்”, எனக் குறிப்பிடப்பட்டிருந்தார்.
அதை நடைமுறைக்குக் கொண்டு வரும் விதமாக கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் தேதி போக்குவரத்துத்துறை துணைச் செயலாளர் உதய பாஸ்கர் அப்போதைய காவல்துறையின் தலைவர் சைலேந்திர பாபுவிற்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில், “முதல்வர், காவலர்களுக்கு இலவசப் பேருந்து திட்டத்தை அமல்படுத்துவதால் ஏற்படும் நிதி இழப்பை ஈடுசெய்ய வேண்டிய நிலையில் இருப்பதால் பயன்பெறும் காவலர்களின் தகவலை போக்குவரத்துத் துறைக்கு அளிக்க வேண்டும்.
குறிப்பாக சென்னையில் ஏசி பேருந்தைத் தவிர இலவசமாக மாதம் முழுவதும் அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் பயணம் செய்யலாம், மற்ற மாவட்டங்களில் விலையில்லாப் பயணச்சீட்டு மூலம் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் திட்டத்தின் கீழ் காவலர்கள் சேர்க்கப்பட்டுப் பயன் பெறலாம்” என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் இந்தத் திட்டத்திற்காக அடையாள அட்டையும் வழங்கப்படவுள்ளது என்பதால், காவலர்கள் பயணச் செலவை தமிழகம் முழுவதும் கணக்கிட ஏதுவாக இரண்டாம் நிலை காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரையிலான காவல்துறையினரின் விவரங்கள் அடங்கிய பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் போக்குவரத்துத்துறை துணைச் செயலாளர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உள்மாவட்டத்தில் கட்டணமின்றி பேருந்தில் பயணம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் அறிவித்த திட்டம் எந்த நிலையில் உள்ளது என்பதை தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிந்த பிறகு போக்குவரத்துத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தெளிவுபடுத்துகிறேன் என போக்குவரத்துறை அமைச்சர் கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகளுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. ஒருவழிப் பாதையில் பயணித்தல், சீருடை அணிவதில் குறைபாடு, நிறுத்தத்தைத் தாண்டி நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் காட்டி அரசுப் பேருந்துகளுக்கு அபராதங்களை காவல்துறை விதித்து வருகின்றனர்.
கடந்த இரு நாட்களில் மட்டும் 200 - க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாம். அரசுப் பேருந்துகளுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படாத நிலையில், காவலர் ஆறுமுகப்பாண்டி அரசு பேருந்து நடத்துனர் இடையே டிக்கெட் எடுப்பது குறித்த வாக்குவாத வீடியோ வெளியான விவகாரத்தைத் தொடர்ந்து, காவலர்களின் இலவச பயணம் குறித்த போக்குவரத்துக் கழக அறிவிப்புக்குப் பிறகு, இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை பார்க்க முடிகிறது.
இதனைத்தொடர்ந்து, போக்குவரத்து துறை - காவல்துறை இடையேயான இந்த மோதல் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும், முதலமைச்சரின் காவலர்களுக்கான இலவச பயண திட்ட அறிவிப்பை நடைமுறைப்படுத்த அரசு தவறியதின் விளைவே, இன்று இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது என்று பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் அறிக்கைவிட தொங்கி உள்ளனர்.
மக்களுக்காக களத்தில் பணியாற்றும் காவலர்களுக்கும், அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கும் இடையே மோதலைத் தவிர்த்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு முயல வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.