ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து, மலைப்பாதையின் 11வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். 6 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்காட்டில் இருந்து சேலத்திற்கு 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ், மலைப்பாதையின் 11வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதில் அந்த பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
50 அடி பள்ளத்திற்குள் பஸ் விழுந்ததில் அதில் இருந்த பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த விபத்தில் 20 பேர் காயமடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோல் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், 2 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.