நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக தான் அதிக இடங்களில் வெல்லும். ஆனால் கடந்த 2019 தேர்தலை விட திமுக கூட்டணிக்கு குறைவான இடங்கள் கிடைக்கும் என NEWS X செய்தி நிறுவனத்தின் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தமிழகத்தில் கடந்த தேர்தலை விட அதிமுக அதிக இடங்களில் வென்றாலும் கூட பாஜகவை விட வெற்றி தொகுதிகளின் எண்ணிக்கையில் பின்தங்கும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓயும் நிலையில் கடைசி நேர தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் தேர்தல் தொடர்பான பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நியூஸ் எக்ஸ் செய்தி நிறுவனம் டி டைனாமிக்ஸ் (News x - D Dynamics) அமைப்புடன் சேர்ந்து நாடு முழுவதும் மக்களவை தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை மேற்கொண்டது. இந்த கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
அதன்படி தமிழ்நாட்டில் அதிக இடங்களில் திமுக தான் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த முறையை காட்டிலும் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை திமுக கூட்டணி கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதேவேளையில், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லாத நிலையில் இந்த முறை அதிமுகவை விட அதிக இடங்களை கைப்பற்றும் என இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜகவை விட குறைந்த இடங்களில் வெற்றி பெற்றாலும் கூட கடந்த 2019 தேர்தலை ஒப்பிடும்போது அதிமுக கூடுதல் இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பின்படி, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக 22 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக 21 இடங்களிலும், திமுக கூட்டணியில் உள்ள கொமதேக கட்சி உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகிறது. அந்த வகையில் இந்த இடங்களில் எல்லாம் திமுக வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 9 சீட் வழங்கப்பட்டுள்ள நிலையில் 6 இடங்களில் வெற்றி வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கடந்த 2019 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தற்போது பாஜக தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இத்தகைய சூழலில் தான் தமிழதக்தில் பாஜக 4 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தேனியில் மட்டும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மகன் ஓபி ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். தற்போது அவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் வரும் மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் வரும் தேர்தலில் அதிமுக 3 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாஜகவை ஒப்பிடும்போது ஒரு இடம் குறைவாகும்.
இதுதவிர மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் வெல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மற்றவர்கள் என்பது எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை. இது திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.