மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரகை கத்பர்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 7 தொகுதிகளுக்கு ஏற்கனவே காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்தது.
தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, திருநெல்வேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி நீடித்தது. இதேபோல விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரையும் காங்கிரஸ் அறிவிக்காமல் இருந்தது.
திருநெல்வேலியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் வேட்பாளராகும் கனவில் இருந்து வந்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் உள்ளிட்ட பலரும் முட்டி மோதினர். இவர்களில் ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டு வந்தது. ஆனால் நெல்லை மாவட்டத்தைச் சேராத ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடாது என திடீரென திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டமும் நடத்தினர்.
இந்தநிலையில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரகை கத்பர்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.