தமிழ்நாட்டிற்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 9 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதி வேட்பாளாராகவும், தூத்துக்குடிக்கு நயினார் நாகேந்திரனையும் அறிவித்து பரபரப்பான டிவிஸ்ட்டை கொடுத்தது பாஜக. இதனையடுத்து, நெல்லை தொகுதிக்கு நயினார் நாகேந்திரன் மாற்றப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றுள்ளது. 20 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிடுகிறது. 4 தொகுதிகளில் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
பாஜக வேட்பாளர்கள் பட்டியலை இன்று மாலை முதல் எந்த நேரத்திலும் எதிர்பார்க்கலாம். பாஜகவின் தேசிய தலைமை வேட்பாளர் பட்டியலை அறிவிப்பார்கள். பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளை விரைவில் இன்றைக்கே அறிவிப்போம். என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் சற்று முன்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பாஜக வேட்பாளர்கள் பட்டியல்:
தென்சென்னை - தமிழிசை சௌந்தரராஜன்
மத்திய சென்னை - வினோஜ் பி செல்வம்
வேலூர் - ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)
கிருஷ்ணகிரி - நரசிம்மன்
நீலகிரி - எல்.முருகன்
கோவை - அண்ணாமலை
பெரம்பலூர் - பாரிவேந்தர் (இ.ஜ.க)
நெல்லை - நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன்
ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அண்ணாமலை, தான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பலமுறை கூறி இருந்த நிலையில், அண்ணாமலை கோவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், யாருமே எதிர்பாராத வகையில் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அது தவறுதலாக வந்து விட்டது. நெல்லை தொகுதி வேட்பாளர் தான் நயினார் நாகேந்திரன் என்று பாஜக விளக்கம் கொடுத்துள்ளது.