நீண்ட இழுபறிக்கு பின் அதிமுக - தேமுதிக இடையே இன்று தொகுதி பங்கீடு கையெழுத்தானது. தேமுதிகவுக்கு 5 தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கி உள்ளார்.
ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. இருப்பினும் தொகுதிகளை பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக 5 லோக்சபா தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கேட்டது. ஆனால் அதிமுக தரப்பில் ராஜ்யசபா சீட்டுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் 5 லோக்சபா தொகுதிகளை ஒதுக்க ஒப்புக்கொண்டது.
இந்நிலையில் தான் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 லோக்சபா தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று கையெழுத்தானது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆகியோர் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு திருவள்ளூர் (தனி), கடலூர், தஞ்சாவூர், மத்திய சென்னை, விருதுநகர் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 5 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட உள்ளது. இதனை பத்திரிகையாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.