பெரிய அளவில் கூட்டணி எதுவும் இல்லாமல் அதிமுக களம் காண வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற போகிறது. வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வரும் 27ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். எனவே அதற்குள் கட்சிகள் தொகுதியை இறுதி செய்து, வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுவிட்டது. அதிமுகவை பொறுத்தவரை பாமக, தேமுதிக மற்றும் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ஆனால் பாமக பாஜக கூட்டணியில் சேர்ந்து விட்டனர். தேமுதிக மற்றும் புதிய தமிழகம் கட்சியுடன் இதுவரை உடன்பாடு எட்டப்படவே இல்லை. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக பேச்சுவார்த்தை குழுவினர், தங்களது கூட்டணியை இறுதி செய்யும் வகையில் தீவிரமாக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார்கள்.
ஜெயலலிதா இருந்த காலம் வரை, வேட்பாளர்கள் பட்டியலை அதிமுகதான் முதல் ஆளாக வெளியிடும். வேட்பாளர்கள் பட்டியல் வந்த பின்னர் தான், தான் வேட்பாளர் என்பதை கட்சி நிர்வாகி அறியும் நிலை இருக்கும். அதேபோல் தேவைப்பாட்டால் வலுவான கூட்டணி அமைப்பார். இல்லாவிட்டால் தனித்தே போட்டியிடவும் தயங்க மாட்டார். கடந்த 2014 தேர்தலில் அதிமுக தனித்தே 39 தொகுதியில் போட்டியிட்டது. அப்போது 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி அப்போது ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.. திமுகவின் கோட்டையான சென்னை மண்டலத்தை மொத்தமாக அதிமுக கைப்பற்றியது. அப்படி எல்லாம் வரலாறுகள் இருக்கின்றன. இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் அடுத்தடுத்து விலக்கப்பட்ட நிலையில், அவர்கள் பாஜக பக்கம் கூட்டணியில் உள்ளனர். அதிமுக பாஜக உடன் சேரக்கூடாது என்று உறுதியாக இருந்து, விலகியே இருந்தது. இதனால் அதிமுக 39 தொகுதியிலும் சில சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் பெரிய கூட்டணி இல்லாமல் களம் இறங்கவும் அதிமுக தயாராகி வருகிறது.
இதற்கிடையில் மக்களவைத் தேர்தலையொட்டி, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி முதற்கட்ட பிரசார சுற்றுப்பயணத்தை, வருகிற 24-ந்தேதி திருச்சியில் தொடங்குகிறார்.
தேமுதிகவுடன் அதிமுக இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடிந்துள்ளது. அதன் பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை. அதிமுக சார்பில் நான்கு தொகுதிகள் ஒதுக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேமுதிக தரப்பில் கூடுதலாக ஒரு ராஜ்யசபா சீட்டு வழங்கும்படி வலியுறுத்தி வருவதால் இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில் நாளை மனுதாக்கல் துவங்க உள்ளதால், தொகுதி பங்கீட்டை முடித்து வேட்பாளர்களை அறிவிக்க அதிமுக முடிவு செய்துள்ளது.
எனவே கூட்டணி முடிவை இன்று மாலைக்குள் தெரிவிக்கும்படி தேமுதிக தலைமையிடம் அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று மாலைக்குள் கூட்டணி தொகுதி பங்கீட்டை முடித்துவிடக்கூடிய சூழலில் அதிமுக இருப்பதால், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.