தமிழகத்தில் மொத்தம் 39 மக்களவை தொகுதிகள் உள்ள நிலையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஓட்டு எண்ணிக்கை என்பது ஜுன் மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை இன்று மதியம் 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
நம் நாட்டில் 5 ஆண்டுக்கு ஒரு முறை மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. இதற்கு முன்பு கடந்த 2019ல் மக்களவை தேர்தல் நடந்தது. அப்போது மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் ஜுன் மாதம் 16ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் மீண்டும் மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் தான் இன்று மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி இன்று மதியம் 3 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், எஸ்எஸ் சந்து ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அவர்கள் தேர்தல் தேதி, வேட்புமனு தாக்கல் தொடங்கும் தேதி, ரிசல்ட் தேதிகளை அறிவித்தனர்.
அதன்படி இந்தியாவில் மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டுக்கு வரும் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கும் அன்றைய தினமே தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 20ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத்தாக்கல் செய்ய மார்ச் 27 ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை என்பது மார்ச் 28 ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு வாபஸ் பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாளாகும். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு ஏப்ரல் 19 ம் தேதி 39 மக்களைவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை என்பது ஜுன் 4ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.