நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன், அக்கட்சியில் இருந்து விலகுவதாக இன்று திடீரென அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சியின் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரங்கள் முன்னெட்டுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் செலவுக்காக திரள் நிதி திரட்டி வருகிறது நாம் தமிழர் கட்சி.
நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களாகவே தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அடுத்த நிலையில் இருந்த மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொருவராக அக்கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராஜா அம்மையப்பன் வெளியிட்ட அறிக்கையில்:-
கட்சிக்குள் நடக்கும் சில விஷயங்களும், சாதி பிரிவினைகளும், சமூகப் படுகொலையையும் கண்டு என்னால் பயணிக்க விருப்பமில்லை. பொதுக்குழு என்ற பெயரில் வெற்று பக்கங்களில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட தொகுதி செயலாளர்களிடம் கையெழுத்து வாங்குவது, நான் பயணிக்கும் கட்சியில் யார் செயலாளர், யார் பொருளாளர் என்பதை அறியாமலும் வெளிப்படுத்தாமலும் பயணிக்க விரும்பவில்லை.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளரான எனக்கே தெரியாமல், கட்சியின் பொதுச்செயலாளர் என்று கூறப்படும் கருப்பையா என்பவர் யார்? கட்சிக்கு என்ன செய்தார்? நீங்கள் நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் பற்றி எல்லாம் உங்களுக்குத் தெரியுமா? வேட்பாளர்கள் சிலரைத் தவிர பல பேரை எப்போதாவது களத்தில் பார்த்து உள்ளீர்களா? கட்சிக்குள் ஜாதி இல்லாமல் செயல்பட முடியுமா? என்ற கேள்விக்கு விடைகள் கிடைக்காமல் சில நாட்களாக தவித்து வருகிறேன்.
பாரதிமோகன், திருமால் செல்வன் போன்றோர் கட்சியின் பொருளாளர் ஆகவும், துணை செயலாளர் ஆகவும் நியமித்ததாக கூறப்படுவது உங்களுக்கு எல்லாம் தெரியுமா? கட்சியில் அண்ணன் விருப்பப்படி செயல்பாடுகள் உள்ளனவா? அண்ணன் அருகில் உள்ள 3 பேரை தவிர்த்து நீங்கள் அண்ணனை சகஜமாக பார்க்க முடிகிறதா? என்பதை அறிந்து கொள்ளுங்கள் என குமுறி உள்ளார் ராஜா அம்மையப்பன்.