கடந்த 34 மாதங்களாக பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள ஹரி நாடாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தைக்குளத்தைச் சேர்ந்தவர் ஹரி நாடார். இவர் சென்னையில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கழுத்து, கை, விரல்கள் என உடல் முழுவதும் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து உலாவுவது இவரது வாடிக்கை. வித்தியாசமான இந்த கெட்டப் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
ராக்கெட் ராஜாவின் பனங்காட்டுப்படை கட்சியில் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட ஹரி நாடார், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு தமிழகத்திலேயே சுயேட்சை வேட்பாளர்களில் அதிக வாக்குகள் அதாவது 37 ஆயிரத்து 726 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வந்த சில நாட்களிலேயே, பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு குற்ற வழக்கில் ஹரி நாடாரை கைது செய்து பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைத்தது.
3 முறை பெங்களூரு சிவில் நீதிமன்றத்திலும், 2 முறை பெங்களூரு உயர் நீதிமன்றத்திலும் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டு, அவை தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் மீண்டும் பெங்களூரு சிவில் நீதிமன்றத்தில் ஹரி நாடார் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து, 1,000 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்த அவர் விரைவில், ஜாமினில் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.