கரூர் அருகே நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த நிலையில், அவரை மர்ம கும்பல் வெட்டியதில் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகே கடந்த 2012-ம் ஆண்டு தேவர் ஜெயந்திக்குச் சென்றுவிட்டு திரும்பிச் செல்லும்போது குண்டு வீசிய வழக்கில் தொடர்புடைய 11 பேர் மீதான வழக்கு, பாதுகாப்பு காரணத்திற்காக, மதுரையிலிருந்து கரூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராவதற்கு ராமர் என்ற ராமகிருஷ்ணன் (ஏ- 1), கார்த்தி என்பவரோடு சேர்ந்து இருசக்கர வாகனத்தில் கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளார்.
அப்போது, அரவக்குறிச்சி அடுத்த தேரப்பாடி பிரிவு சாலை அருகே காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் கொடூரமாக அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
இந்த கொடூரத் தாக்குதலில் ராமர் என்ற ராமகிருஷ்ணன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கார்த்தி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, காவல்துறை மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலைச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூரில் பட்டப்பகலில் வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த ஒருவர், கரூர் மாவட்ட எல்லையில் வைத்து கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.