இந்தியாவில் எகிறும் விலைவாசியை குறைக்கவும், உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், உணவு தானியங்களை மானிய விலையில் விற்பனை செய்யும் " பாரத் பிராண்ட் திட்டத்தை இந்திய பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
இந்த திட்டத்திற்கு, வடமாநிலங்களில் பெரும் வரவேற்பு கிடைத்தது. எனவே, தமிழகத்திலும் "பாரத் பிராண்ட்" பெயர்களில் பருப்பு வகைகளை மானிய விலையில் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசின் NCCF அமைப்பு தொடங்கி இருக்கிறது.
அந்தவகையில், தமிழ்நாட்டில் 50 நடமாடும் வேன்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களின் முக்கிய இடங்களில் வாடிக்கையாளர்களுக்கு அதிக தரம் வாய்ந்த பருப்பு வகைகளை மானிய விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, துவரம்பருப்பு ஒரு கிலோ 60 ரூபாய்க்கு கிடைக்கிறது.
அது போலவே, கோதுமையிலும் அதிரடி கொண்டுவரப்பட்டுள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், "பாரத் ஆட்டா" என்ற பெயரில், ஒரு கிலோ கோதுமை மாவு 27.50 ரூபாய்க்கு விற்க உத்தரவிட்டது. இதற்காக தமிழகத்திற்கு, 1,000 டன் கோதுமை மாவும் கடந்த வாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மாவு விற்பனை செய்யும் பணியை, "நாபெட்" எனப்படும், மத்திய கூட்டுறவு கூட்டுறவு நிறுவனம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
இப்போது, வெளிச்சந்தையில் அரிசி விலையும் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கிலோ பொன்னி பழைய அரிசி விலை 55 ரூபாயாக உள்ளது. அதேபோல, கடந்த வாரம், "பாரத் ரைஸ்" என்ற பெயரில், கிலோ அரிசியை 29 ரூபாய்க்கு விற்க மத்திய அரசு உத்தரவிட்டது.
மொத்தம் 5 லட்சம் டன் பாரத் அரிசி விற்கப்பட உள்ளது. அதில் தமிழகத்திற்கு, 22,000 டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாரத் அரிசி 5 கிலோ மற்றும் 10 கிலோ அளவுகளில் கிடைக்கும்.
இந்த அரிசியை விற்க, தேசிய வேளாண் கூட்டுறவு இணையம், தேசிய கூட்டுறவு நிதி மற்றும் மத்திய பண்டகசாலை, கேந்திரிய பந்தர் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் சென்னை உட்பட முக்கிய நகரங்களில் வேன்களில் விற்க போகின்றன. கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பாரத் அரிசி, பாரத் கோதுமை மாவு விற்குமாறு, மத்திய அரசை கூட்டுறவு துறை வலியுறுத்தியிருக்கிறது.
மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது, தமிழக மக்களுக்கு பெரும் பலனையும், வரவேற்பையும் பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது.