தமிழக சட்டசபையில் சபாநாயகரின் செயல்பாடுகள் அவரது பதவியின் கண்ணியத்தையும் அவையின் மாண்பையும் குறைத்துவிட்டது என ஆளுநர் மாளிகை கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசு தயாரித்த ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான கருத்துகள் இருந்ததூ. தேசிய கீதம் தமது உரைக்கும் முன்பும் பின்பும் இசைக்கப்பட ஆளுநர், முதல்வருக்கும் சபாநாயகருக்கும் பலமுறை கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால், ஆளுநரின் அறிவுறுத்தலை அரசு நிராகரித்துவிட்டது. அரசின் சாதனைகளை பிரதிபலிப்பதற்கு பதில், ஆளுநர் உரையில் தவறான கருத்துகள் இடம் பெற்றிருந்தது. இதனால் தான் தமிழக அரசின் உரையை ஆளுநர் புறக்கணித்தார். ஆளுநர் உரையை சபாநாயகர் படித்து முடித்தவுடன் தேசிய கீதம் பாட அனைவரும் எழுந்தனர்.
அப்போது, வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல் ஆளுநரை சபாநாயகர் அப்பாவு விமர்சிக்க தொடங்கிவிட்டார். சபாநாயகரின் செயல்பாடு அவரது பதவியின் கண்ணியத்தையும் அவையின் மாண்பையும் குறைத்துவிட்டது. தாம் கோட்சே, சாவர்க்கரின் வாரிசு என சபாநாயகரின் குற்றச்சாட்டு அவருடைய பதவியின் கண்ணியத்தை குறைத்துவிட்டது. இவ்வாறு ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.