• vilasalnews@gmail.com

மாநில அரசின் உரையை படிக்க மறுத்த தமிழக ஆளுநர்... இதான் காரணமாம்!

  • Share on

தமிழக சட்டசபையில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதாகவும், உரையில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் ஆளுநர் ஆர்.என் ரவி கூறியுள்ளார். இதனால் நான்ன் உரையை சட்டசபையில் முழுவதுமாக வாசிக்காமல் புறக்கணித்ததாக ஆர்.என் ரவி கூறினார்.

கடந்த முறை சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார். அதனால், ஆளுநர் இருக்கும்போதே, அவருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதனையடுத்து, ஆளுநர் அவையில் இருந்து வெளியேறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டசபைக்கு வந்த ஆளுநருக்கு பாரம்பரிய முறைப்படி மரியாதை தரப்பட்டது. தனது உரையை தமிழில் தொடங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சில நிமிடங்களிலேயே நன்றி வணக்கம் எனக் கூறி உரையை நிறைவு செய்து விட்டு அமர்ந்தார். கடந்த ஆண்டு தமிழ்நாடு, தந்தை பெரியார், அண்ணா போன்ற சில வார்த்தைகளை மட்டுமே வாசிக்காமல் புறக்கணித்தார் ஆளுநர்.

ஆனால், இந்த ஆண்டு சட்டசபையில் "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து" என்ற திருக்குறளை வாசித்தார். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம் என்று மட்டும் கூறி உரையை முற்றிலும் புறக்கணித்தார் ஆளுநர். அதற்கான காரணமாக சட்டசபையில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதாக சட்டசபையிலேயே ஆளுநர் கூறினார். அதனுடன் உரையை முழுவதுமாக வாசிப்பதில் தார்மீக அடிப்படையில் தனக்கு முழு உடன்பாடு இல்லை என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் படிக்க இருந்த உரையின் தமிழாக்கத்தை வாசிக்கத் தொடங்கினார். மேலும், இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே அவையிலிருந்து ஆளுநர் வெளியேறிவிட்டார். 

கடந்த ஆண்டு உரையில் சில வார்த்தைகளை மட்டுமே புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த ஆண்டு மொத்த உரையையுமே புறக்கணித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

  • Share on

பெரியாரிடம் தன் மகனின் வேலைக்காக வ.உ.சி நின்றாரா? ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிர்ப்பு!

தமிழக சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறியதற்கு காரணமே வேறாம்... ஆளுநர் மாளிகை விளக்கம்!

  • Share on