வ.உ.சிதம்பரத்தை இழுவுபடுத்தி பேசிய ஆ.ராசா பொதுவெளியில் மன்னிப்பு கோர வேண்டும் என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக சமூக ஊடக பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் அன்னபூர்ணா பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
2ஜி முறைகேட்டிலும், சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கிலும் இன்று வரை சிக்கி வெளியே வரமுடியாமல் இருக்கும் உத்தமர் ஆ.ராசா அவர்களே...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக மேடை ஒன்றில் பேசும்போது நீங்கள் கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் மறைந்த தமிழகத்தின் பெருமை அய்யா வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை அவர்களை குறிப்பிட்டு பேசிய பேச்சுக்கள் அனைத்தும் பொய்யின் உச்சம், வழக்கமாக அனைத்து இடங்களிலும் சமூகத்தை வைத்து நீங்கள் செய்யும் அதே அரசியலை அந்த மேடையிலும் அய்யா.வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை குறிப்பிடுகிறேன் என்ற பெயரில் அவரின் பெயரை குறிப்பிட்டு இழிவுபடுத்திவிட்டிர்கள்.
அய்யா.வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை பிள்ளைமார் சமூக தலைவர் ஆக்கிவிட்டார்கள் என்றும், அய்யா.வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தனது மகனுக்கு காவல்துறையில் வேலை வேண்டும் என்று ஈ.வே.ராவிடம் கெஞ்சியதாக வேறு உண்மைக்கு புறம்பான தகவல்களை உள்நோக்கத்துடன் கூறி அய்யா.வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை அவமதிப்பு செய்துவிட்டீர்கள்!
திராவிட கலாச்சாரம் என்ற பெயரில் இத்தனை ஆண்டுகளாக நீங்கள் சார்ந்த இயக்கம் செய்த இழிவான அரசியல் தான் அய்யா வ.உ.சிதம்பரம் பிள்ளை, பசும்பொன் முத்துராமலிங்கம், சட்டமேதை அம்பெத்கர் போன்ற பெரும்பாலான தியாக தலைவர்களை சாதிய சங்க தலைவர்கள் போல மக்கள் மத்தியில் சித்தரித்துவிட்டது. அப்படி நீங்கள் பழிபோட்டு அரசியல் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் காரி உமிழ வேண்டியது இத்தனை ஆண்டுகால திராவிட அரசியல் செய்தவர்களை...
1936ல் மறைந்த அய்யா.வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தனது மகனுக்காக ஈ.வே.ராவிடம் சிபாரிசுக்கு சென்றார் என எத்தனை பிசகாமல் பொய் பிரச்சாரம் செய்கிறீர்கள்? வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை பார்த்து அரசியலுக்கு வந்தவர்தான் ஈ.வே.ரா. இதனைக் கோவில்பட்டியில் நடந்த கூட்டத்தில் வெளிப்படையாகவே ஈ.வே.ரா சொல்லி இருக்கிறார். “அவர் (வ.உ.சிதம்பரம் பிள்ளை) வங்காளப் பிரிவினையின் போது தமிழ்நாட்டில் சிறப்பாக இந்த ஜில்லாவில் அரும்பெரும் தலைவராயிருந்து நடத்திய கிளர்ச்சியின் போது நான் உல்லாசத்துடன் விடலைப் புருஜனாய் விளையாடிக் கொண்டிருந்தேன். அவரையும் (வ.உ.சிதம்பரம் பிள்ளை) அவர் போன்றோரையும் கண்டே பொதுத் தொண்டில் இறங்கினேன்" என்று பேசியவர் ஈ.வே.ரா. (ஆதாரம் - குடிஅரசு 26.6.1927).
இப்படி ஈ.வே.ரா அரசியலில் கத்துக்குட்டியாக இருந்த சமயம் பெரும் தலைவராக இருந்த அய்யா.வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் ஈ.வே.ராவிடம் சிபாரிசுக்கு போய் நின்றாரா? மேடை கிடைக்கிறதே என பேசக்கூடாது ஆ.ராசா அவர்களே..!
அய்யா.வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை இழுவுபடுத்தி பேசிய ஆ.ராசா பொதுவெளியில் மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.