• vilasalnews@gmail.com

பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் இடையே மோதல் : தூத்துக்குடி இளைஞர் காயம்

  • Share on

பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் அய்யனடைப்பு பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி பேரூரணியை சேர்ந்த முருகன் மகன் மருதவேல் (வயது 31), கே.வி.கே. நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் பாலசுப்பிரமணியன் என்ற பாலா (32), அண்ணாநகரை சேர்ந்த ஜோதிபாஸ்கர் மகன் சங்கரமூர்த்தி (29) உள்ளிட்ட 21 பேரை தூத்துக்குடி தென்பாகம் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மருதவேல், பாலசுப்பிரமணியன், சங்கரமூர்த்தி ஆகியோருக்கு அறையில் படுத்து தூங்க இடம் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. மேலும், நேற்று காலையில் அவர்கள் சாப்பிடுவதற்காக வெளியே வந்தனர். அப்போதும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் பாலசுப்பிரமணியன், சங்கரமூர்த்தி ஆகியோர் ஜன்னல் கம்பியை எடுத்து மருதவேலை தாக்கியதாகவும், சாப்பாட்டு தட்டை உடைத்து, அவரது உடம்பில் கீறி காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் அவர் காயமடைந்தார்.

இதனை அறிந்த சிறை போலீசார் உடனடியாக மருதவேலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் குறித்து நெல்லை பெருமாள்புரம் போலீசார், பாலசுப்பிரமணியன், சங்கரமூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Share on

விஜய் அரசியல் குறித்த கேள்வி.. தாயகம் திரும்பிய முதல்வர் சொன்ன நச் பதில்

பெரியாரிடம் தன் மகனின் வேலைக்காக வ.உ.சி நின்றாரா? ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிர்ப்பு!

  • Share on