தேய்பிறை அஷ்டமி நாளான இன்று தனது கட்சி பெயரை அறிவித்து, நாள் நட்சத்திரம் நல்ல நேரம் பார்க்காமல் பெரியார் வழியில் பகுத்தறிவு பயணத்தை நடிகர் விஜய் தொடங்கியுள்ளார் என்ற விமர்சனம் வந்துள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் அதிரடியான ஒரு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய்.
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள அவர், இதற்காக நாள், நட்சத்திரம் பார்க்கவில்லை. அதாவது நல்ல நேரம் பார்க்கவில்லை. பெரியார் காட்டிய பகுத்தறிவு பாதையில் தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கியிருக்கிறாராம் நடிகர் விஜய். இந்தக் காலத்தில் பகுத்தறிவுக் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகளே நாள் நட்சத்திரம் பார்த்து தான் அறிவிப்புகளை வெளியிடுகின்றன. நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.
ஆனால், விஜய் எடுத்த எடுப்பிலேயே சடங்கு சம்பிரதாயங்களை உடைத்தெறிந்து கவனம் ஈர்த்துள்ளாராம். பொதுவாக அரசியல் கட்சியின் பெயரை வளர்பிறை சுப முகூர்த்த தினத்தில் தான் அறிவிப்பார்கள். ஆனால் அதற்கு நேர் மாறாக விஜய் தேய்பிறை அஷ்டமி நாளில் கட்சி பெயரை அறிவித்துள்ளாராம். இதன் மூலம் அவர் தன்னை பகுத்தறிவுவாதியாகவும், சாதி சமயங்களுக்கு அப்பாற்பட்டவராகவும் காட்டியிருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
பெரியார், அம்பேத்கர், போன்ற தலைவர்களின் புத்தகங்களை படிக்க வேண்டும் என சில மாதங்களுக்கு முன்னர் மாணவர்கள் மத்தியில் விஜய் பேசும் போது கூறியது குறிப்பிடத்தக்கது.