நாடார் சமுதாயத்தினரை போஸ்டர் ஒட்ட மட்டும் வைத்துக்கொள்ளாமல், கட்சியில் முக்கிய பதவிகளை வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் நேரடியாகவே கேட்டிருக்கிறார் நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளரான கரிக்கோல்ராஜ்.
நாடார் மகஜன சங்கத்தின் மாநில மாநாடு மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பலர் கலந்து கொண்டனர். அதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொண்டார். அவருடன் அதிமுகவில் உள்ள நாடார் சமுதாய முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
அப்போது மாநாட்டில் பேசிய நாடார் மகாஜன சங்க மாநில செயலாளர் கரிக்கோல் ராஜ், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவில் நாடார் சமுதாயத்தினருக்கு 2 எம்பி சீட் வழங்க வேண்டும் என எடுத்த எடுப்பிலேயே சிக்ஸர் வீசினார். கொங்கு மண்டலத்திலும், சென்னையிலும் தலா 1 தொகுதி ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
அதேபோல், அதிமுகவில் உள்ள நாடார் சமுதாய பிரமுகர்களை வெறும் வால் போஸ்டர் ஒட்ட மட்டும் வைத்துக்கொள்ளாமல், கட்சியில் உள்ள சார்பு அணிகளில் முக்கியப் பதவிகளையும் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை மேடையில் உட்கார வைத்துக்கொண்டே நேரடியாக கேட்டுவிட்டார் கரிக்கோல்ராஜ். இதனால் தர்ம சங்கடத்தில் நெளிந்த எடப்பாடி பழனிசாமி என்ன ரியாக்ஷன் கொடுப்பது எனத் தெரியாமல் அமர்ந்திருந்தார். ஒரு கட்டத்தில் பேச அழைக்கப்பட்ட போது, அதிமுகவில் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு நிச்சயம் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிநிதித்துவம் உண்டு என கூறி கைதட்டல்களை அள்ளினார்.
வியாபாரம் செய்து தாங்கள் முன்னேறியதை போல், அரசியலிலும் தங்களை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் என பேசிய கரிக்கோல் ராஜ், நாடார் மஹாஜன சங்கம் சார்பில் நாடார் சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் என்னென்ன நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதையும் விளக்கி கூறினார்.