தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் இன்று கோர விபத்து ஏற்பட்டது. விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் மலைப்பாதை பகுதி சுமார் 6 கி.மீ தொலைவுக்கு அமைந்துள்ளது. இந்த சாலையில் கட்டமேடு முதல் போலீஸ் சோதனைச் சாவடி வரை உள்ள 3 கி.மீ சாலை மிகவும் சரிவாகவும், வளைவாகவும் காணப்படுகிறது.
தொப்பூர் கணவாய் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது வழக்கம். இந்த பகுதியில் பாலங்கள் சரியாக பராமரிக்கப்படாதது, மலைப்பாதையில் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வது போன்ற காரணங்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இப் பகுதியில் இரட்டை பாலம் உள்ளது. இந்த பாலத்தின் மீது 2 லாரிகள், 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானன. விபத்தில் ஒரு லாரி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து நடந்த தொப்பூர் கணவாய் பகுதிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.