உறவினர் திருமணத்திற்காக தனியார் ஆம்னி பேருந்தில் சென்னை சென்றபோது வியாபாரி வைத்திருந்த பையில் இருந்து 30 தங்க நகைகளை எட்டயபுரம் அருகே திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே உள்ள சேர்வைக்காரன் மடத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் ராஜபாண்டி ( 60 ) வாழை கமிஷன் வியாபாரம் செய்து வருகிறார். இவரும் இவரது மனைவி வினோ ( 58 ) இருவரும் சென்னையில் உள்ள உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு செல்ல நேற்று முன்தினம் இரவு பேக்கில் சுமார் 30 பவுன் நகையுடன் புறப்பட்டனர். முக்காணி அருகே பழைய காயலில் இருந்து சென்னை செல்வதற்காக தனியார் ஆம்னி பேருந்தில் புறப்பட்டு சென்றனர்.
எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரையில் உள்ள தனியார் ஹோட்டலில் இரவு உணவிற்காக பஸ் நிறுத்தப்பட்டது. ராஜபாண்டியும் வினோவும் நகை இருந்த பேக்கை பஸ்ஸில் வைத்துவிட்டு கீழே இறங்கி சென்று சிறிது நேரம் கழித்து பஸ்ஸிற்கு திரும்பி வந்த பார்த்தபோது பேக்கில் வைத்திருந்த 30 பவுன் மதிப்புள்ள தங்க நகைகளை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பஸ்ஸில் தேடிப் பார்த்தபோது நகை கிடைக்கவில்லை. பிறகு இது பற்றி எட்டயபுரம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து எட்டயபுரம் காவல் ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நகை திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.