அயோத்தி ராமர் கோவில் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அவ்விழாவில் கலந்து கொண்டதாக கூறி, அவர் அயோத்தி விழாவில் கலந்துகொண்டது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்த நிலையில்,பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்ததில், இந்த புகைப்படம் உண்மையானது அல்ல என்பதை அறிய முடிந்தது.
மேலும் தேடியதில், இன்று கன்னியாகுமரியில் உள்ள “சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமை பதி” என்ற கோவிலுக்கு பழனிச்சாமி வந்துள்ளதையும், அதன் நேரலை NewsJ யூடியூப் பக்கத்தில் ஒளிபரப்பப்பட்டு வருவதையும் காண முடிந்தது.
மேலும் பரவி வரும் புகைப்படம் குறித்து தேடியதில், இன்று அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை Zee news வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிந்தது.
மேலும் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம், பழனிச்சாமி உள்ளது போன்று எடிட் செய்யப்பட்டு தவறாக பரவி வருகிறது. எனவே, எடப்பாடி பழனிச்சாமி அயோத்தி விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது உறுதியாகியுள்ளது.