தமிழ்நாடு கோயில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் நாளை சிறப்பு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இந்து சமய அறநிலையத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு கோயில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து, இந்து சமய அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை சிறப்பு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து பாஜகவைச் சேர்ந்த பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "நாளைய தினம் அயோத்தியில் ஸ்ரீராமர் திருவுருவச் சிலை, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து, நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. சாதி மத வேறுபாடின்றி, மக்கள் அனைவரும் இந்த புண்ணிய தினத்தை வரவேற்கின்றனர். பல ஆண்டு காலமாக நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் அனைத்திலும் சிறப்புப் பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மத சார்பற்ற அரசு நடத்துகிறோம் என்ற பெயரில் இந்து மத விரோதச் செயல்பாடுகளையே முழு வேலையாகக் கொண்டிருக்கும் திமுக அரசு, தமிழக ஆலயங்களில் சிறப்புப் பூஜைகளுக்கும் அன்னதானத்திற்க்கும் தடை விதித்துள்ளதாகத் தெரிகிறது. ஆலய நடைமுறைகளில் தலையிட திமுக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? அதுமட்டுமின்றி, ஸ்ரீராமர் சிலை நிறுவப்படுவதை முன்னிட்டு, தமிழகத்தில் கோவில் நிர்வாகம் சார்பிலோ, பொதுமக்கள் சார்பிலோ, எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்றும், பொதுமக்கள் கண்டுகளிக்க பெரிய திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என்றும் காவல்துறையினர் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகக் கோவில்கள் பக்தர்களுக்குச் சொந்தமானவை. ஆலய நடைமுறைகளில் தேவையில்லாமல் தலையிடவோ, வழிபடும் முறைகளில் குறுக்கிடவோ திமுக அரசுக்கு எந்த உரிமையுமில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்து மத மக்களின் அடிப்படை உரிமையான ஆலய வழிபாட்டைத் தடுப்பதை, மாற்று மத மக்களே விரும்ப மாட்டார்கள். யாரை திருப்திபடுத்த இந்த பிரிவினை முயற்சியில் ஈடுபடுகிறது திமுக அரசு?
மாதம் ஒருமுறை இந்து மத மக்களைச் சீண்டிப் பார்க்கும் அற்பச் செயல்பாடுகளை திமுக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். திமுகவின் தடையை மீறி, அயோத்தி ஸ்ரீராமர் கோவில் விழாவுக்காக, தமிழகக் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில்"அரசியல் சட்ட பிரிவு 26 ன் படிஅரசு ஆன்மிக/ பூஜை விஷயங்களில் தலையிட முடியாது. எனவே இந்துக்கள் தமிழக அரசின் இந்துவிரோத ஆணையினை புறம் தள்ளி பூஜைகள், அன்னதானம் ஆகியவற்றை மேற்கொள்வோம். தடுத்தால் தடையை உடைத்து நம் மத உரிமையை, கடமையை நிலை நிறுத்துவோம். " என தெரிவித்திருந்தார்.
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், "அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நாளை நடைபெறவுள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாடும் விழாக்கோலம் பூண்டுள்ளது. நம் தமிழகத்தில் கோயில்களில் சிறப்பு பூஜைகள், பக்திப் பாடல்களை கூட்டாகப் பாடும் பஜனை, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆன்மிக அமைப்புகள் மட்டுமல்லாது, பொதுமக்களும், பல்வேறு சமூக அமைப்புகளும் ஏற்பாடு செய்துள்ளன.
ஆனால், அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் நாளை கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியையும் நடத்த அனுமதிக்கக் கூடாது திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், 'கோயில்களுக்கு வராதீர்கள்' என இந்துக்கள் அங்குள்ள மதச்சார்பற்ற அதிகாரிகளால் விரட்டப்படுகின்றனர்.
கோயில்கள் மட்டுமல்லாது திருமண மண்டபங்கள் உள்ளிட்ட தனியார் இடங்கள், கோயில்களுக்கு வெளியே பொது இடங்களில் ராமர் படம் வைத்து வழிபடவும், அன்னதானம் வழங்கவும் ராம பக்தர்களும், பொது மக்களும் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், திமுக அரசின் காவல் துறை அவர்களை அழைத்து, எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என மிரட்டியுள்ளனர். எந்தவொரு ஜனநாயக ஆட்சியிலும் நடக்க முடியாத அட்டூழியம் இது.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரம், வழிபாட்டு உரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்கு எதிராக திமுக அரசு செயல்படுகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. இந்துக்களுக்கு திமுக அரசின் இந்த அராஜகங்கள் கொடுங்கோல் ஆக்கிரமிப்பாளன் அவுரங்கசீப் ஆட்சியை நினைவூட்டுகிறது. ராமர் கோயிலுக்காக 500 ஆண்டு காலம் போராடிய இந்துக்கள், ராமர் கோயில் திறப்பு நாளை கொண்டாடவும் போராட வேண்டியிருக்கிறது. பிரதமர் மோடி அவர்கள் மூன்று நாட்களாக தமிழகத்தில் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் என பயணம் மேற்கொண்டதால் தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சியை அடக்க நினைக்கிறது திமுக அரசு. அடக்குமுறைகளால் மக்களின் பக்தி உணர்வை, ஆன்மிக எழுச்சியை தடுத்துவிட முடியாது என்பதை திமுக அரசு உணர வேண்டும்.
எனவே, நாளை கோயில்கள், திருமண மண்டபங்கள், பொது இடங்களில் சிறப்பு வழிபாடு, பஜனை, அன்னதானம் நடத்த திமுக அரசு தடை விதிக்கக் கூடாது. இதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள வாய்மொழி உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை திரும்பப்பெற வேண்டும். கோயில்கள், பொது இடங்களில் நாளை சிறப்பு வழிபாடு, விழாக்கள் நடத்த அன்னதானம் வழங்க தடை இல்லை என தமிழ்நாடு அரசு வெளிப்படையாக உடனே அறிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தான் அறநிலையத்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கோயில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது. அப்படியான எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை, பொய்யான செய்தியை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர் என அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.