கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் செல்லும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
கோயம்பேட்டில் இருந்து புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், அங்கே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அங்கே கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த டிச. மாதம் இந்த புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். படிப்படியாக அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் செல்லும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் மெட்ரோ, புறநகர் ரயில் நிலையம் வரும் வரை இதே நிலை இருக்கும் என்றும் ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம்பாக்கம் வர மக்கள் சிரமப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.