திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் உட்பட இந்த மாதம் 3 நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் ஜனவரி 15 ஆம் தேதியில் இருந்து கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15ஆம் தேதி பொங்கல், அடுத்த நாள் மாட்டுப்பொங்கல், 17ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், டாஸ்மாக் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தன்று, டாஸ்மாக் செயல்படாது. அடுத்தபடியாக ஜனவரி 25ஆம் தேதி வள்ளலார் நினைவு தினம் மற்றும் தைப்பூசத்தன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது. அதேபோல, ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படாது.
தமிழ்நாடு மதுபானம் விதிகள் 1981-ன்படி அனைத்து இந்திய தயாரிப்பு மதுபான கடைகள் (டாஸ்மாக்), அயல்நாட்டு மதுபான கடைகள் (எலைட்) மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் (பார்) ஆகியவை 16ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை), 25ஆம் தேதி (வியாழக்கிழமை), 26ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 3 தினங்களில் நாள் முழுவதும் மூடப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, டாஸ்மாக் கடைகள் விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்து வருகின்றனர். அதேபோல் பொங்கலுக்கு டாஸ்மாக் விற்பனை இலக்கு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.