திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சியில் செல்போனில் பேசிய பெண்ணை வேடசந்தூர் திமுக எம்எல்ஏ காந்தி ராஜன் ‛‛உங்கிட்ட என்ன பிரதமர் மோடியா பேசப்போறாரு'' என அவர் கோபப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வெல்லனம்பட்டி கிராமத்தில் நடந்த பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கும் விழாவில் அந்த தொகுதியின் திமுக எம்எல்ஏ காந்தி ராஜன் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு, ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கினார். அதன்பிறகு விழாவில் அவர் மைக் முன்பு நின்று பேசினார்.
இந்த வேளையில் அவருக்கு முன்பு அமர்ந்திருந்த பெண்களில் ஒருவர் தலையை குனிந்தபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதை கவனித்த காந்தி ராஜன் கோபமடைந்தார். இதையடுத்து அவர், அம்மா.. அம்மா.. நீங்கள் செல்போனில் பேசிவிட்டு சாவகாசமாக சொல்றீங்களா.. நான் வேற ஊருக்கு போய்ட்டு வந்து மீண்டும் பேசுறேன். ஏம்மா இந்த மாதிரி அக்கிரமம் பண்ணுறீங்க.. செல்போன் இல்லாத காலத்தில் என்ன செய்தீர்கள்?
பொது இடத்தில் வந்தால் ஒரு மரியாதை இருக்க வேண்டும். கட்டுப்பாடு இருக்க வேண்டும். சும்மா உங்கள் இஷ்டத்துக்கு செல்போனில் பேசிவிட்டு ரூ.1000 வாங்கிவிட்டு சென்றால் உங்களுக்காக நாங்கள் இத்தனை அதிகாரிகளுடன் வந்து இருப்பது ஏன்? வெல்லனம்பட்டியில் தான் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என நான் கூறி இங்கே வந்துள்ளேன்.
அனைத்து நிகழ்ச்சிகளையும் வேடச்சந்தூரிலேயே நடத்துகிறோம். வெல்லனம்பட்டியில் நிகழ்ச்சி நடத்தி அனைவரையும் சந்திக்க வேண்டும் என இங்கே வந்துள்ளேன். இங்கே வந்து செல்போனில் பேசினால் எப்படி? என்ன பிரதமர் மோடியா உங்கிட்ட பேசப்போறாரு.. சொந்தக்காரங்க தான் யாராவது பேசப்போறாங்க.. அப்புறம் போய் பேசும்மா என கோபத்தை காட்டினார்.