ஓரினச்சேர்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நண்பனை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு தானும் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அமைந்தகரை எம்.எம் காலனி பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (25). இவர் அம்பத்தூரில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி வழக்கம் போல் வேலைக்குச் சென்ற லோகேஷ் மறுநாள் வரை வீடு திரும்பாததால் பெற்றோர் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர்.
அப்போது அவரது செல் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் அச்சமடைந்த பெற்றோர், காணாமல் போன தனது மகனை கண்டு பிடித்து தருமாறு அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன லோகேஷை தீவிரமாக தேடி வந்தனர்.
இதற்கிடையே லோகேஷ் பணியாற்றிய அதே மென்பொருள் நிறுவத்தில் வேலை பார்த்து வந்த, அம்பத்தூர் பகுதியை சேர்ந்த வாஞ்சிநாதன் (27) என்பவர் நேற்று தனது அக்காவிற்கு வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பினார். அதில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தன்னை தேட வேண்டாம் எனவும் தெரிவித்து இருந்தார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வாஞ்சிநாதனின் அக்கா உடனே அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, வாஞ்சிநாதன் அவர் முகப்பேர் பன்னீர்நகரில் உள்ள ஓய்வு விடுதியில் இருப்பதை செல்போன் எண்ணை வைத்து கண்டுபிடித்தனர்.
உடனே அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது வாஞ்சிநாதன் தங்கி இருந்த அறையின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்துள்ளது. உடனே போலீசார், விடுதி ஊழியர்கள் உதவியுடன் கதவை திறந்து சென்று பார்த்தனர். அங்கு லோகேஷ் தரையில் இறந்த நிலையிலும், வாஞ்சிநாதன் தூக்கிட்ட நிலையிலும் இருந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் நொளம்பூர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் லோகேஷ் மற்றும் வாஞ்சிநாதன் இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும், இருவரும் ஓரினச்சேர்க்கையின் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 8 தேதி வழக்கம் போல வேலைக்குச் சென்ற இருவரும் பின்னர் முகப்பேரில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியதும், அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் வாஞ்சிநாதன், லோகேஷ் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சிலர் இயற்கைக்கு மாறாக ஓரினச்சேர்க்கை உறவில் இருக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் இத்தகை உறவுகளில் ஏற்படும் பிரச்சனை என்பது உயிரை கூட பறிக்கிறது. சமீபகாலமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தான் தற்போது சென்னையில் திடுக்கிட வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.