செங்கல்பட்டு அருகே கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய விவகாரத்தில் இப்போது திராவிடர் கழகத்தின் பகுத்தறிவாளர் அமைப்பும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கொந்தளிப்பை வெளிப்படுத்தி உள்ளது.
பிரம்மாண்டமான முறையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டிருந்தாலும் மக்கள் சென்னைக்குள் வர சிரமப்படுகின்றனர். மெட்ரோ ரயில் சேவை, புறநகர் ரயில் சேவை ஆகியவை இன்னும் ஏற்படுத்தித் தரப்படாத நிலையில் மக்கள் அலைச்சலுக்கு ஆளாகின்றனர் என்ற சர்ச்சைகள் ஒரு புறம் இருக்க,
மற்றொரு புறம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு ஏன் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைக்கனும்? அங்கே எதற்கு உதயசூரியன் சின்னம் இருக்கனும்? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கேள்விகளை எழுப்புகின்றனர்.
இந்த வரிசையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் புதிய சர்ச்சையை எதிர்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக திராவிடர் கழகத்தின் பகுத்தறிவாளர் கழகம் அரசுக்கு முன்வைத்துள்ள வேண்டுகோள்:
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் தமிழ்நாடு அரசால் மிகச் சிறப்பாக, மக்கள் நலன்கருதி கட்டப் பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய வளாகத்தில் கோவில் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கக் கூடியதும் அரசு ஆணை மீறலுமாகும்.
அறிஞர் அண்ணா முதலமைச்சராக வந்த நிலையில், அரசு அலுவலகங்களிலோ, வளாகத்திலோ எந்த மத வழிபாட்டுச் சின்னங்களும் இருக்கக் கூடாது என்று சுற்றறிக்கை தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டது. நீதிமன்றங்களும், அரசு வளாகத்திற்குள் எந்த மதத் தொடர்பான கோவிலையும் கட்டக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளன. இந்த நிலையில், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மைக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் 'திராவிட மாடல்’ அரசுக்குச் சொந்தமான கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இதனை உடனே அகற்றவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இன்றேல், நீதிமன்றம் வாயிலாகப் பரிகாரம் காண நேரிடும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடக் கூடாது; இவ்வாட்சியின் காவலர்கள் நாங்கள்! இவ்வாறு பகுத்தறிவாளர் கழகம் வலியுறுத்தி உள்ளது.