தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு முழுவதும் `என் மண், என் மக்கள்' என்ற பெயரில் நடைப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியிலுள்ள லூர்து மாதா அன்னை தேவாலயத்துக்கு, தன்னுடைய கட்சிக்காரர்களுடன் சென்றிருக்கிறார். அப்போது, அண்ணாமலை தேவாலயத்துக்குள் வரக் கூடாது என, அங்கிருந்த கிறிஸ்துவ இளைஞர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
`புனிதமான இடத்தில் நீங்கள் வந்து மாலை போடக் கூடாது... என்று தெரிவித்ததும், அண்ணாமலை, எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு வந்தேன் எனக் கூறியிருக்கிறார். உடனே அங்கிருந்த இளைஞர்கள், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டுமெனக் கூறும் நீங்கள், கிறிஸ்துவ மக்களை வதைப்பது ஏன்? பின்தங்கிய மக்களுக்கு மத்திய அரசின் சலுகைகளை வழங்க மறுப்பது ஏன்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.
அதையடுத்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, இலங்கையில் 2019-ம் ஆண்டு 1,60,000 தமிழர்கள் இறந்தபோது, நீங்கள் எங்கே போனீர்கள். கட்சிக்காரர்கள் சிலரின் தூண்டுதல் காரணமாக நீங்கள் இப்படிச் செய்கிறீர்கள். இங்கே என்னை வரக் கூடாது என்று தடுப்பதற்கு என்ன உரிமை உங்களுக்கு இருக்கிறது. இந்த ஆலயம் உங்கள் பெயரில் இருக்கிறதா. நான் தர்ணாவில் ஈடுபட்டால், உங்களால் என்ன செய்ய முடியும்? என்றார். அதற்கு இளைஞர்கள், நீங்கள் இங்கு வரக் கூடாது. இது எங்களுக்கான ஆலயம் என்று கூறினர்.
உடனே அங்கு விரைந்த போலீஸார், அண்ணாமலையுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை, அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அப்போது, அண்ணாமலை வெளியே போ... பா.ஜ.க வெளியே போ... என்று சிலர் கோஷமிட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பிறகு, அண்ணாமலை லூர்து மாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, பாப்பிரெட்டிப்பட்டிக்கு கிளம்பி சென்றார்.
இதனிடையே, அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் தளத்தில் தர்மபுரி நடைபயணம் பற்றி பதிவிட்டுள்ளார். அதில், "தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதி, பி.பள்ளிப்பட்டியில் அமைந்துள்ள, தூய லூர்து அன்னை திருத்தலத்தில் இறை வழிபாடு செய்ய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தமிழக மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடனும் அமைதியுடனும், நலமுடன் வாழ அன்னையைப் பிரார்த்தித்துக் கொண்டோம்" என்று பதிவிட்டுள்ளார்.