திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலின் பேஸ்புக் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு ஆபாச படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வர கோயிலானது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 52ஆவது சிவத்தலமாக இக்கோயில் இருக்கிறது. இது புதுச்சேரியின் காரைக்காலில் அமைந்திருக்கிறது. சமீபத்தில்தான் இந்த கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர். இப்படி வர முடியாதவர்கள் ஆன்லைன் மூலம் கோயில் நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.
இதற்கென ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர ஸ்வாமி திருநள்ளாறு எனும் பேஸ்புக் பக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த பக்கத்தில், கோயில் நிகழ்ச்சிகள் நேரலையாகவும் அப்டேட் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த 3ம் தேதி மர்மநபர்கள் சிலர் இந்த பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்திருக்கின்றனர். ஹேக் செய்து ஸ்டோரியில் ஆபாச படங்களை வைத்திருக்கின்றனர். இதனால் அதிர்ந்த போன பக்தர்கள் புகார் அளிக்கவே, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அது மட்டுமல்லாது, பேஸ்புக்கிடமும் புகார் அளிக்கப்பட்டது. இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த பேஸ்புக், ஆபாச படங்களை டெலிட் செய்தது. ஆனால் தற்போது வரை ஹேக்கர் வசமிடமிருந்து இந்த பக்கத்தை மீட்கவில்லை. எனவே மீண்டும் மீண்டும் ஆபாச படங்கள் அப்லோட் செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகனை சந்தித்த புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனடியாக ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் பக்கத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள எல். முருகன், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரிடம் இது தொடர்பாக எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்துள்ளார். ஏற்கெனவே காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருந்தது. இது போன்று ஹேக்கர்களின் கைவரிசை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.