இன்று போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் உடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், நாளை முதல் காலவரையற்ற போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் உள்ளன. அதில் 23 தொழிற்சங்கத்தினர் இணைந்து வேலைநிறுத்த போராட்டம் குறித்து அறிவித்து இருந்தனர்.
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி என ஆறு முக்கிய கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.
சிஐடியூ தொழிற்சங்கம், அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 23 தொழிற்சங்கத்தினர் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்தன. பொதுவாகப் பொங்கல் காலகட்டத்தில் பலரும் பேருந்துகளைப் பயன்படுத்தியே தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்கள். நீண்ட வார விடுமுறை என்பதால் இந்த காலகட்டத்தில் பேருந்து சேவை ரொம்பவே முக்கியம்.
இந்த நேரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதனால் பொங்கல் விழாவுக்குப் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியுமா என்பதிலேயே கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக சில நாட்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும், அதில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை.
உடன்பாடு இல்லை என்பதால் வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அடுத்த வாரம் பொங்கல் விழா கொண்டாடப்படும் நிலையில், இந்த வேலைநிறுத்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சங்கங்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கூடுதல் நிதி செலவாகும் என்பதால் நிதித்துறையுடன் ஆலோசிக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறியிருந்தார்.
இந்தச் சூழலில் இன்றைய தினம் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொழிலாளர் நல ஆணையம் இந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுமுக முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது. ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கான காலக்கெடு, ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஆகியவை முக்கிய கோரிக்கைகளாக இருந்தது.
இருப்பினும் இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் நாளை முதல் காலவரையற்ற போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஆறு கோரிக்கைகளில் இருந்து ஒரு கோரிக்கைக்கு வந்ததாகவும் அப்போதும் தமிழக அரசு ஏற்கவில்லை என்பதால் வேறு வழியின்றி வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துவதாகத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன