ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் தனக்கு சொந்தமான லாரி ஒன்றில் அங்கிருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு அசாம் மாநிலம் சென்றுள்ளார். அங்கிருந்து ரப்பர் சீட்டுகளை ஏற்றிக்கொண்டு கேரளா சென்றுள்ளார்.
கடந்த 31ம் தேதி விசாகப்பட்டினம் வந்தபோது திடீரென சாலையின் குறுக்கே ஓடிவந்த நபர் மீது லாரி மோதாமல் இருக்க வண்டியை திருப்பியபோது, சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரி கடுமையாக சேதமடைந்தது. லாரியை ஓட்டி வந்த ஈஸ்வரனுக்கும் காலில் கடுமையாக காயம் ஏற்பட்டது.
மேலும், அவரிடம் கையில் 40 ஆயிரம் ரூபாய் பணம் இருந்த நிலையில் வழக்கு செலவு என்று காவல்துறையினர் பத்தாயிரம் வாங்கிக் கொண்டார்களாம்.
விபத்தில் சிக்கிய லாரியை மீட்டு பெருந்துறை கொண்டுவர ஒரு லட்சம் ரூபாய் செலவு ஆகும் என்ற நிலையில், லாரி உரிமையாளர்களுக்கான எதிர்நீச்சல் என்ற வாட்ஸ்அப் குழுவில், தனது நிலையை எடுத்துகூறி உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் ஈஸ்வரன்.
இந்த நிலையில் கோவில்பட்டியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் கணேசன் என்பவர் தனது இ வாகன் என்ற தனது செயலி மூலம் நிதி திரட்ட ஆரம்பித்தார். குழுவிலுள்ள அனைவரும் தாமாக முன்வந்து ஒரு ஆளுக்கு 251 ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும் அவருக்கு உதவலாம் என்று கூறியிருந்தார். இந்த எதிர்நீச்சல் குழுவில் 600க்கும் மேற்ப்பட்டோர் உள்ளனர். ஒரு 300 பேர் பணம் கொடுத்தால் போதும் அந்த லாரி ஓட்டுநருக்கு உதவலாம் என தெரிவித்து, 251ரூபாய் வரை மட்டுமே பணம் செலுத்தும் வகையிலான க்யூஆர் கோர்டையும் குழுவில் பகிர்ந்தார். அதனையடுத்து ஒரே நாளில் 300 பேர் வரை பணம் செலுத்தினர்.
லாரியை பெருந்துறை கொண்டு செல்ல 1 லட்சம் ரூபாய் கேட்ட நிறுவனமும், 70,000 கொடுத்தால் போதும் நாங்களும் அவருக்கு உதவ தயாராக இருக்கிறோம் என மீட்பு வாகனத்தை அனுப்பி வைத்தனர்.
5 நாட்களாக விபத்தில் சிக்கி கஷ்டப்பட்ட லாரியை தமிழகம் கொண்டு வர உதவிய அனைவரும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் ஈஸ்வரன்.
லாரி உரிமையாளர்களின் எதிர்நீச்சல் என்ற வாட்ஸ்அப் குழுவின் இந்த செயல்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, அனைவரிடமும் பாராட்டையும் பெற்றுள்ளது.