பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவை ஜனவரி 10ம் தேதி முதல் ரேஷன் கடை மூலம் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் எப்படி பொங்கல் பரிசு தொகுப்பு + ரூ.1000 ரொக்கத்தை பெற வேண்டும் என்பது பற்றிய விபரமும் வெளியாகி உள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை என்பது வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை தற்போது ஒவ்வொரு ஆண்டு பொங்கல் பண்டிகையின்போதும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் என்பது ரேஷன் கடைகள் மூலம் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தான் தமிழக அரசு சார்பில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொங்கல் பரிசுத்தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக கடந்த 2ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.
இதுமட்டுமின்றி ரூ.1000 ரொக்கப்பணம் என்பது வழங்கப்படுவதாக நேற்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கத்தொகைக்கான டோக்கன் விநியோகம் என்பது நாளை தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை முதல் 9ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கத்தொகை பெறும் மக்களுக்கு ரேஷன் பணியாளர்கள் மூலம் டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது.
இந்த டோக்கனில் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.1000 பெறும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதன்படி பொதுமக்கள் ஜனவரி 10ம் தேதி முதல் ஜனவரி 14ம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு சென்று அதனை பெற்று கொள்ளலாம். ஒருவேளை டோக்கன் வாங்க தவறியவர்கள் வரும் 14ம் தேதி நேரடியாக ரேஷன் கடை சென்று விபரங்களை வழங்கி ரூ.1000 + பொங்கல் தொகுப்பு வாங்கி கொள்ளலாம் எனவும் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.