வருகிற 26ம் தேதி நாட்டின் 75வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழா பேரணியில் தமிழக அலங்கார ஊர்தி இடம்பெறுகிறது. தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியில் உத்திரமேரூர் கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளது.
வரும் 26 ஆம் தேதி இந்தியாவின் 75-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மூவர்ணக் கொடியை ஏற்றுகிறார். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொள்கிறார்.
இந்தக் குடியரசு தின விழாவின் போது மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளும் இடம் பெறும். கடமை பாதையில் இந்த அலங்கார ஊர்திகள் அணி வகுத்து செல்லும். குடியரசு தின விழா ஏற்பாடுகளை கடந்த 2 மாதங்களாக முழு வீச்சில் மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், குடியரசு தினவிழாவின் போது தமிழக அரசின் அலங்கார ஊர்தியும் இடம்பெறுகிறது.
இந்த முறை தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியில் உத்திரமேரூர் கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளது. கலை நயத்துடன் தயாராகி உள்ள தமிழக அரசின் அலங்கார ஊர்தி டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் கம்பீரமாக இடம் பெறுகிறது. மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் மற்றும் நான் முதல்வன் திட்டங்கள், மனுநீதி சோழன் குறித்த ஊர்தி, குடவோலை முறையை காட்சிப்படுத்தும் அலங்காரா ஊர்திகள் இடம்பெறுகின்றன.
இதற்கிடையே, நடப்பு ஆண்டு குடியரசு தின அணி வகுப்பில் டெல்லி, பஞ்சாப் மாநில அரசின் அலங்கார ஊர்திக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதற்கு பஞ்சாப் மற்றும் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. முன்னதாக, கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த ஆண்டு அலங்கார ஊர்திக்கு அனுமதி கிடைத்துள்ளது.