• vilasalnews@gmail.com

பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு: 2 நாள் பயணமாக எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார்

  • Share on

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக டெல்லி சென்றார். அங்கு அவர் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டசபைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அரசியல் களம், முன் எப்போதும் இல்லாத வகையில் பரபரப்பாகி வருகிறது.

சட்டசபை தேர்தல் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, கூட்டணிகள் இறுதியாகவில்லை, தொகுதி பங்கீடுகள் நடைபெறவில்லை. ஆனாலும் கூட, அ.தி.மு.க. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வரிந்து கட்டிக்கொண்டிருக்கிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். இதேபோன்று அ.தி.மு.க.விடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பேசி வருகிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார்.

கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு மாபெரும் ஆளுமைகள் மறைவுக்கு பின்னர் முதன் முதலாக நடைபெறுகிற சட்டசபை தேர்தல் இது என்பதால் பெருத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக டெல்லிக்கு நேற்று விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசு தலைமைச் செயலாளர் க.சண்முகம், முதல்-அமைச்சரின் செயலாளர்கள் சாய்குமார், செந்தில்குமார் ஆகியோரும் சென்றனர்.

விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.

பகல் 3 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் சென்று இறங்கிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், அ.தி.மு.க. எம்.பி.க்கள் கே.பி.முனுசாமி, நவநீத கிருஷ்ணன், முகமது ஜான், சந்திரசேகரன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்துகள் கொடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

வரவேற்புக்கு பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு இல்லத்துக்கு சென்று அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

இரவு 7.30 மணிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் இல்லத்துக்கு எடப்பாடி பழனிசாமி சென்று, அவரை சந்தித்து பேசினார்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது முதலில் தமிழகத்தின் வளர்ச்சித்திட்டங்கள் பற்றி இருவரும் விவாதித்தனர் என்றும், அதைத் தொடர்ந்து தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும், வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றியும், தொகுதி பங்கீடு குறித்தும் அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நவம்பர் மாதம் 21-ந் தேதி அமித்ஷா சென்னை வந்தபோது, அவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் விமான நிலையம் சென்று வரவேற்றதும், அப்போது அமித்ஷா பங்கேற்ற விழாவில், அவர்கள் இருவரும் கலந்து கொண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க.வின் கூட்டணி தொடரும் என்று அறிவித்ததும் நினைவுகூரத்தக்கது.

இன்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு, காலை 10.30 மணி அளவில் பிரதமர் இல்லத்தில் நடைபெறுகிறது.

புத்தாண்டில் முதல் முறையாக பிரதமர் மோடியை சந்திக்கிற எடப்பாடி பழனிசாமி, அவருக்கு புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவிக்கிறார்.

இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வருமாறு பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்கிறார்.

இது தவிர அரசியல் ரீதியாகவும் பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார். குறிப்பாக தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு, தலைவர்கள் கூட்டு பிரசாரம் உள்ளிட்டவை குறித்தும் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி பேசக்கூடும் எனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது 2 நாள் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலை சென்னை திரும்புகிறார்.

  • Share on

தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.19,500 கோடியை விரைவாக விடுவிக்க வேண்டும்: நிர்மலா சீதாராமனிடம் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு: முதல் 2 நாட்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க நடவடிக்கை

  • Share on