சென்னையில் நடைபெறும் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 19 ஆம் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திருப்பூரில் பாஜக சார்பில் நடத்தும் பொங்கல் விழா பொதுக்கூட்டத்திலும் மோடி பங்கேற்க உள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2 ஆம் தேதி திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பிறகு பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க நேரில் வருமாறு பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமர் மோடியை நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பிதழை வழங்கினார்.
பிரதமர் மோடி வருகை தருவதாக உறுதியளித்ததாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களை சந்திக்கும் போது கூறியிருந்தார். இந்த நிலையில், சென்னையில் நடைபெறும் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 19 ஆம் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திருப்பூர் செல்கிறார்.
திருப்பூரில் பாஜக சார்பில் நடத்தும் பொங்கல் விழா பொதுக்கூட்டத்திலும் மோடி பங்கேற்க உள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த மருத்துவமனையை திறந்து வைக்கிறார். பிரதமர் மோடி ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக தமிழகம் வருகை தர உள்ளது பாஜகவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.