• vilasalnews@gmail.com

பிரதமர் மோடியுடன் மேட்டுப்பட்டி மூர்த்தி சந்திப்பு... யார் இந்த மூர்த்தி?

  • Share on

அண்மையில் திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி விளையாட்டு வீரர்களைச் சந்தித்தார். அப்போது, உயரமான ஒரு மனிதரும் பிரதமர் மோடியைச் சந்தித்தார். அவர் மேட்டுப்பட்டி மூர்த்தி.

திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை திருச்சி வந்திருந்தார். அப்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்களையும் சந்தித்தார் பிரதமர் மோடி. பாஜக விளையாட்டு மேம்பாட்டு பிரிவு சார்பில், இந்தச் சந்திப்பு ஏற்பாடு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது மதுரை மேட்டுப்பட்டியைச் சேர்ந்த மூர்த்தியும் பிரதமர் மோடியைச் சந்தித்தார். மதுரை சுற்றுவட்டார பகுதி மக்கள் மத்தியில் பிரபலமான ஜல்லிக்கட்டு வீரர் மூர்த்தி. மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் நடைபெற்ற பல நூற்றுக்கணக்கான ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று, பல நூறு மாடுகளை அடக்கிப் பரிசுகளை அள்ளியவர். மேட்டுப்பட்டி மூர்த்திக்கு என ஜல்லிக்கட்டு பிரியர்கள் மத்தியில் பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு.


1993 வாடிப்பட்டி ஜல்லிக்கட்டுல மூர்த்தியோட அண்ணன் இறந்த அடுத்த நாள், முதன் முதலா வாடிவாசல எதிர்த்து  நின்றார் மூர்த்தி. அப்போ அவருக்கு வயசு பதிமூணு. 'இளங்கண்ணு பயமறியாது சொல்றத போல' களத்துல நின்னப்போ அவருக்கு பயம் தெரியலையாம். காளையை அடக்கணும்கிற வைராக்கியம் மட்டும்தான். அப்போ தொடங்கி இப்போ வரை கிட்டத்தட்ட ஆயிரம் ஜல்லிக்கட்டைப் பாத்துள்ளார் மூர்த்தி. தற்போது, ஜல்லிக்கட்டு காளைகளை தயார் செய்வது, மாடுபிடி வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பது என வாழ்க்கையை நடத்தி வருகிறார்

பல ஊர் ஜல்லிக்கட்டுகளில் மாடுகளால் பந்தாடப்பட்டும் இருக்கிறார் மூர்த்தி. நெஞ்சில் 6 ஆபரேஷன், வயிற்றில் முப்பதுக்கும் மேற்பட்ட தையல்களே, மூர்த்தியின் ஜல்லிக்கட்டு வெறிக்கு சாட்சி. ஒருமுறை, ஜல்லிக்கட்டில் மாடு, மூர்த்தியின் தொண்டையில் குத்தியதில் அதன் பிறகு அவரது குரலே மாறிவிட்டதாம்.

பல இடங்களில், மூர்த்தி, களத்தில் இறங்கினாலே, காளை உரிமையாளர்கள் அலறுவார்களாம். ஒவ்வொரு ரவுண்டிலும் இத்தனை வீரர்கள் தான் இறங்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. மூர்த்தி இறங்கும் ரவுண்டில் மாட்டை களமிறக்க வேண்டாம் என மாடுகளை நிறுத்தி வைத்து பின்னர் அவிழ்த்து விட்ட சம்பவங்களும் இருக்கிறதாம்.


கமல்ஹாசன் நடித்த 'விருமாண்டி' படத்தில் மாடு பிடிக்கும் காட்சிக்கு, கமல்ஹாசனுக்கு டூப் போட்டுள்ளார் மூர்த்தி. சசிகுமார் நடித்த 'காரி' திரைப்படத்திலும் நடித்துள்ளார் மூர்த்தி. இந்நிலையில், சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார் மேட்டுப்பட்டி மூத்தி.

  • Share on

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்... தமிழக அரசு அறிவிப்பு!

  • Share on