பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், யார் யாருக்கெல்லாம் இது கிடைக்காது என்பது குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் ரூ. 238.92 கோடி செலவில், தமிழகத்தில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது.
இந்த தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால், ரொக்கப்பணம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ரொக்கம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான் பச்சரிசி, வெல்லம், முழு கரும்புடன் ரூ.1000 பரிசு தொகையும் வழங்கப்படும் என்று தமிழக அரசு இன்று அதிரடியாக அறிவித்திருக்கிறது. ஆனால் இந்த தொகை அனைவருக்கும் கிடைக்காது என்பது கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பெற முடியும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைத்தாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் ஆகியோருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.