திருச்சியில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது மோடி மோடி என கோஷம் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மேடையில் இருந்த படி பிரதமர் மோடி தொண்டர்களை சமாதானப்படுத்தும் வகையில் செய்கை செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒருநாள் பயணமாக தமிழ்நாட்டின் திருச்சிக்கு வந்தார். காலை 10.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திறங்கினார். ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அவரை வரவேற்றார்.
அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். இதையடுத்து ரூ1,100 கோடியிலான திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் ரூ20,140 கோடி மதிப்பிலான 20 திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
திருச்சி புதிய விமான முனையம் திறப்பு நிகழ்ச்சி திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியுடன், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணையமைச்சர் எல் முருகன், ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, எவ வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார். அதன்பிறகு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா திருச்சி புதிய விமான முனையம் பற்றி எடுத்துரைத்தார். இதையடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேச அழைக்கப்பட்டார். அவர் மேடையில் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து மைக் அருகே வந்து நின்றார்.
ஸ்டாலின் பேசுத் தொடங்கும் போதே ”மோடி, மோடி” என்று பாஜகவினர் கோஷங்கள் எழுப்பினர். அதற்கு அமைதியாக இருங்கள் என்று கூறும் வகையில் மோடி கைகளால் சைகை செய்தார். கீழே அமர்ந்திருந்த பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களை அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மு.க.ஸ்டாலின் பேசும் போது கூட்டத்திற்கு வந்திருந்த திமுகவினர் ”ஸ்டாலின், ஸ்டாலின்” என்று பலமாக ஆரவாரம் செய்தனர்.
மோடி மேடையேறி கை காண்பித்த போது இருந்த ஆரவாரத்தை விட ஸ்டாலின் பேசும் போது அதிகமாக இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருச்சியில் நாங்கள் சம்பவம் செய்து விட்டோம் என்று பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.