பிரதமர் மோடியின் தமிழக வருகையையொட்டி டிவிட்டரில் #Vanakkam_Modi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
அதிமுக ஆட்சியின் போது பிரதமர் மோடி தமிழகம் வரும் போது அவரது வருகைக்கு எதிராக அப்போதைய எதிர்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கறுப்பு பலூன்களை பறக்க விட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் டிவிட்டரில் #GoBackModi என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகும். இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின் பிரதமர் தமிழகம் வந்த போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக அவரை மரியாதையுடன் வரவேற்றது.
வழக்கமாக பிரதமர் வருகையின்போது 'வெல்கம் மோடி' என பா.ஜ.,வினரும், 'கோ பேக் மோடி' என எதிர்க்கட்சியினரும் ஹேஸ்டேக்கை டிரெண்ட் ஆக்குவர்.
கடந்த முறை சர்வதேச சதுரங்க போட்டி நடந்தபோது தமிழகம் வந்த பிரதமரை 'வெல்கம் மோடி' என பா.ஜ.,வின் ஐ.டி.,விங்க் சமூகவலைத்தளத்தில் டிரெண்டாக்கியது. அது 1.5 மில்லியன் (15 லட்சம்) பார்வையாளரை கடந்தது. அதேநேரம் 'கோ பேக் மோடி' என்ற ஹேஸ்டேக்கும் டிரெண்டாகி 3 லட்சம் என்ற எண்ணிக்கையில் இருந்தது.
இம்முறை 2 மில்லியன் பார்வையாளரை கடக்கும் வகையில் தமிழ் வார்த்தையான 'வணக்கம் மோடி'யை டிரெண்ட் செய்ய பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.
அந்தவகையில், நாளை திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக தமிழகம் வர இருக்கும் பிரதமர் மோடியை வரவேற்று, தற்போது வரை 2 லட்சத்திற்கும் மேல் #Vanakkam_Modi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
பிரதமர் வருகையின் போது வழக்கமாக #GoBackModi என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வந்த நிலையில் தற்போது #Vanakkam_Modi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.