தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற விஜயகாந்த் அதில் இருந்து மீண்டார். அவ்வப்போது கட்சி அலுவலகம் வந்து தொண்டர்களை சந்தித்து வருகிறார் விஜயகாந்த். கடந்த மாதம் 18ம் தேதி சென்னை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் அவர் வழக்கமான பரிசோதனைக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவருக்கு சளி, இருமல் காரணமாக அவருக்கு சுவாசிப்பதில் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் 2 வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்ற விஜயகாந்த் பூரண குணமடைந்தார்.
இதையடுத்து கடந்த டிசம்பர் 11ம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனையடுத்து கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார் விஜயகாந்த்.
இந்நிலையில் தான் செவ்வாய்கிழமை இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 15 நாட்களுக்கு பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தேமுதிக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுவதாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.